தேசிய செய்திகள்

ஒடிசாவில் 35 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்ட பெண்; பச்சை குத்திய அடையாளம் உதவியது

பிரமீலாவின் கையில் இருந்த பச்சை குத்திய அடையாளம், அவரை அவரது குடும்பத்தினருடன் இணைக்க உதவியுள்ளது.

புவனேஸ்வர்,

இமாசல பிரதேச மாநிலம் பங்ரோட்டு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில், பிரமீலா என்ற பெண் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் பற்றிய எந்த தகவலும் காப்பக நிர்வாகிகளிடம் இல்லை. அந்த பெண் இதற்கு முன்னதாக சிம்லாவில் உள்ள காப்பகத்தில் இருந்து வந்தார் என்ற தகவல் மட்டும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

இதனிடையே காணாமல் போனவர்களை அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கும் வகையில் இமாசல பிரதேச அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘அப்னோ தக்’ இயக்கம் மூலமாக, பிரமீலா குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இந்த இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி ஸ்மிரிதிகா நேகி, சமீபத்தில் பிரமீலாவை நேரில் சந்தித்து பேசியபோது, ஒடிசா பற்றிய சில நினைவுகளை பிரமீலா பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அதிகாரிகள் மற்றொரு விஷயத்தையும் கவனித்தனர். பிரமீலாவின் கையில் ஒடிசா மொழியில் சில எழுத்துகள் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம், பிரமீலாவின் பூர்வீகம் ஒடிசாவாக இருக்கலாம் என முடிவுக்கு வந்த அதிகாரிகள், ஒடிசா மாநில காவல்துறையுடன் இணைந்து, பிரமீலாவின் பூர்வீகத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த முயற்சியின் விளைவாக, இறுதியில் பிரமீலாவின் குடும்பத்தினர் ஒடிசாவின் கேந்திரபாரா பகுதியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பிரமீலாவின் குடும்பத்தினர், முதியோர் இல்லத்தில் இருக்கும் பிரமீலாவுடன் வீடியோ கால் மூலமாக பேசினர். பிரமீலாவின் கையில் இருந்த பச்சை குத்திய அடையாளம், அவரை அவரது குடும்பத்தினருடன் இணைக்க உதவியுள்ளது. விரைவில் பிரமீலாவை அவரது வீட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT