ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளியூரில் தங்கி படித்து வரும் நிலையில், மற்ற 2 மகன்களும் பெற்றோருடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாகேஷின் வீட்டிற்குள் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, நாகேஷின் 2-வது மகன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவை திறக்குமாறு சத்தம் போட்டனர். சிறிது நேரம் கழித்து கவிதா கதவை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, நாகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். நாகேஷை அவரது மனைவி கவிதா, கத்தியால் குத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அவர்களது இளைய மகனின் கண் முன்னால் நடந்துள்ளது. நடந்ததைப் பார்த்து அந்த சிறுவன் பயத்தில் அழுது கொண்டிருந்தான்.
இதனிடையே நாகேஷ் ஆட்டோ மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், டாக்டர்கள் அவரை ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகேஷ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவை கைது செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கவிதாவிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் அவர் தனது கணவரை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் இந்த தகவலை காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.