பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்தவர் சோமசுந்தர் (52). இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு ஸ்வேதா (25), சுப்ரியா (20) என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
இந்த நிலையில், கிழக்கு பெங்களூருவின் சீகேஹள்ளி பகுதியில் உள்ள தம்னிகா லேஅவுட்டில் அமைந்துள்ள சாய் கிரீன் குடியிருப்பில் சோமசுந்தர், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் இளைய மகள் சுப்ரியா ஆகியோர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் நடத்திய விசாரணையில், தம்பதியரின் மூத்த மகள் ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் சேர்ந்து இந்த கொலைகளை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்வேதா மற்றும் கென்னத் ஆகியோரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-ஸ்வேதா பெங்களூருவில் பணியாற்றி வந்தபோது கென்னத் என்ற இளைஞரை காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், கென்னத் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, 2 மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் சீகேஹள்ளியில் உள்ள தம்னிகா லேஅவுட்டில் அமைந்துள்ள சாய் கிரீன் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். திருமணம் செய்யாமல் இருவரும் கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்கு பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஸ்வேதா அதனை பொருட்படுத்தவில்லை. இதற்கிடையே தனது ஆடம்பர வாழ்க்கைக்காக பணம் தேவைப்பட்டதால், பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், பணம் செலுத்துமாறு சோமசுந்தரின் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு ஸ்வேதாவிடம் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பணத்தை எடுத்து காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வேதா, தனது ரூ.30 லட்சம் கடனை அடைக்க சொத்தில் தனது பங்கை வழங்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால், பெற்றோர் மற்றும் தங்கையை கொன்றுவிட்டால் சொத்து முழுவதும் தனக்கே கிடைத்துவிடும் என்றும், அதை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்றும் ஸ்வேதா திட்டமிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்
இதன்படி, காதலன் கென்னத்துடன் சேர்ந்து திட்டமிட்டு பெற்றோர் மற்றும் தங்கையை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த பிறகே கொலையின் முழு பின்னணி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கிடையே, புதுவையில் வைத்து ஸ்வேதா சிக்கியுள்ளார். அவரது காதலன் கென்னத்தை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.