ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சோசோ கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வயதான மாமனார், மாமியார் மற்றும் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக கவிதா செங்கல் சூளையில் கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார்.
இருப்பினும் தனது குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் கவிதா உறுதியாக இருந்தார். எனவே ஊர்க்காவல் படை தேர்வுக்கு தயாராகி வந்தார். அவரிடம் பிரத்யேக ஷூக்கள் எதுவும் இல்லாத நிலையில், தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிராமத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வெறும் காலில் ஓடி பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 4-ந்தேதி நடைபெற்ற ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வில் கவிதா கலந்து கொண்டார். அங்கே 1.6 கி.மீ. தூரம் ஓடுவதற்கான தேர்வு நடைபெற்றது. அந்த தூரத்தை காலில் செருப்பின்றி, கட்டிய சேலையுடன் சுமார் 8 நிமிடங்களில் கவிதா ஓடி முடித்தார். இது நிர்ணயிக்கப்பட்ட 10 நிமிட நேர வரம்பை விட மிகக் குறைவானதாகும்.
ஊர்க்காவல் படையில் கணவரை இழந்த பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள பணியிடத்திற்காக அக்டோபர் 24 முதல் நவம்பர் 5 வரை நடைபெறும் அதிகாரப்பூர்வ தேர்வுகளுக்கு கவிதா தற்போது தயாராகி வருகிறார். அவர் சேலையுடன், வெறும் காலோடு ஊர்க்காவல் படைத் தேர்வில் ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், கவிதாவின் மனஉறுதிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் ஷூ வாங்கவும், உடற்பயிற்சிக்கான உடைகளை வாங்கவும் கவிதாவுக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.