மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 40 சதவீத நாடாளுமன்ற தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தும் என்று அறிவித்ததன் மூலம் 17வது மக்களவை தேர்தலின் தோற்றத்தையே மாற்ற முனைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஒடிசா முதல்மந்திரி நவீன் பட்நாயக், தனது பிஜூ ஜனதாதளம் 33 சதவீத தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த 1952ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டுவரை ஒட்டுமொத்தமாக பெண் எம்.பி.க்களின் சராசரி விகிதம் 7.45 சதவீதமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி உள்ளது.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற கோஷம் 20 ஆண்டுகளாக நீடித்தபோதிலும், அதற்கான மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களவையில் பெண்கள் பிரதிநிதித்துவம் மோசமாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2 பிரதான திராவிட கட்சிகள், பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதில் மோசமாக செயல்படவில்லை. அ.இ.அ.தி.மு.க. இதுவரை 7 பெண் எம்.பி.க்களை அனுப்பி உள்ளது. தி.மு.க. எல்லா தேர்தல்களிலும் சேர்த்து மொத்தம் 4 பெண் எம்.பி.க்களை மட்டுமே அனுப்பி வைத்துள்ளது. இந்த தடவை, தி.மு.க. போட்டியிட உள்ள 20 தொகுதிகளில் 2 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
தி.மு.க.வின் கனிமொழி, முதல்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் அவர் மட்டுமே விண்ணப்பித்திருந்தார். கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு தென் சென்னையில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா தனது மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தூத்துக்குடியில் நிறுத்தி உள்ளது.
அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒரேயொரு தொகுதி மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் தொகுதியில் மரகதம் குமரவேல் களம் இறங்கியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் கரூர் தொகுதி மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிமணி அங்கு போட்டியிடுகிறார்.
தே.மு.தி.க. போட்டியிடும் 4 தொகுதிகளில் ஒரு தொகுதிகூட பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்படவில்லை.
அதேபோல பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளிலும் ஒரு தொகுதிகூட பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் எத்தனை பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதை பார்த்து விட்டோம். ராணி மங்கம்மாள், வேலு நாச்சியாரில் இருந்து முத்துலட்சுமி ரெட்டி, ஜெயலலிதா வரை அரசியல் உலகில் பங்காற்றிய நீண்ட பெண்கள் பட்டியலை இந்த மாநிலம் கொண்டுள்ளது. ஆனால், அரசியலில் உள்ள குடும்பத்தினரை தவிர, வேறு பெண்களுக்கு இக்கால கட்சிகள் போதிய வாய்ப்புகளை தர மறுக்கின்றன.
1952ம் ஆண்டு நடந்த முதலாவது பொதுத்தேர்தலில் இருந்து இதுவரை தமிழ்நாடு 19 பெண்களை மட்டுமே நாடாளுமன்றத்துக்கு அனுப்பி உள்ளது. காங்கிரசின் மரகதம் சந்திரசேகர், இந்த மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். அவர் முதல் தடவையாக 1952ம் ஆண்டில் இருந்து 5 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். மத்திய மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.
முதலாவது மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பெண் எம்.பி.க்கள் இருந்தநிலையில், 1967, 1980 மற்றும் 1996ம் ஆண்டுகளில் பெண்கள் பிரதிநிதித்துவமே இல்லை. அதிகபட்சமாக, 2004 மற்றும் 2014ம் ஆண்டுகளில், தலா 4 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த விஷயத்திலும், காங்கிரஸ், பா.ஜனதா போன்ற தேசிய கட்சிகள் ஏமாற்றி விட்டன.
2014ம் ஆண்டுதான், பெண் எம்.பி.க்கள் அதிகபட்ச சதவீதத்தில் இருந்தனர். 543 எம்.பி.க்களில் 66 பேர் பெண்களாக இருந்தனர். நெருக்கடி நிலைக்கு பிறகு, 1977ம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் மிகக்குறைவான பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது, 19 பெண்கள் மட்டுமே அனுப்பப்பட்டனர். 1980ம் ஆண்டு, முதல்முறையாக பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இதில் ஊக்கம் அளிக்கும்வகையில் இருப்பது என்னவென்றால்,
இந்திய தேர்தல் வரலாற்றில், ஆண் எம்.பி.க்களின் வெற்றி சதவீதத்தை விட பெண் எம்.பி.க்களின் வெற்றி சதவீதம் சிறப்பாக உள்ளது.
தேசிய கட்சிகளில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிதான் மிகக்குறைவான பெண் எம்.பி.க்களை, அதாவது 6 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது. இவ்விஷயத்துக்கு அக்கட்சி போதிய முக்கியத்துவம் அளித்ததாக தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்போம் என்று அரசியல் கட்சிகள் மீண்டும் வாக்குறுதி அளிக்கத் தொடங்கி உள்ளன. ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் கொண்டு வரும் முதலாவது மசோதா, பெண்கள் மசோதாதான் என்று ராகுல் காந்தி சென்னையில் சமீபத்தில் அறிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது ராஜீவ் காந்தியின் மூளையில் உதித்த திட்டம். முதலில் 1993ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு என்று வந்தபோது அரசியல் கட்சிகள் ஆதரிக்க மறுத்து விட்டன. 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை எத்தனையோ தடவை மக்களவை நிறைவேற்றியபோதிலும், மாநிலங்களவையில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
நமக்கு பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் சபாநாயகர்கள், சில பெண் முதல்மந்திரிகள், தற்போது பாதுகாப்பு மந்திரியாக இருக்கும் பெண் என இருந்துள்ளனர். ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா முடங்கிக்கிடக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் விகிதாச்சாரத்தில் (12.6 சதவீதம்), 193 நாடுகள் பட்டியலில் இந்தியா 150வது இடத்தில் உள்ளது. பெண்கள் பிரதிநிதித்துவத்தில், வங்காளதேசம் (20.6 %), பாகிஸ்தான் (20.2 %) போன்ற இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக உள்ளன.
பெண்கள் பிரதிநிதித்துவத்தில், ருவாண்டா (61.3 சதவீதம்), கியூபா (53.2 சதவீதம்), பொலிவியா (53.1 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. வளர்ந்த நாடுகளில் பின்லாந்து (41.5 சதவீதம்), ஸ்பெயின் (41.1 சதவீதம்), நியூசிலாந்து (40 சதவீதம்), பிரான்ஸ் (39.7 சதவீதம்), இத்தாலி (35.7 சதவீதம்), இங்கிலாந்து (32 சதவீதம்), ஜெர்மனி (30.9 சதவீதம்), ஆஸ்திரேலியா (30 சதவீதம்) ஆகிய நாடுகள் அமெரிக்காவை விட (23.5சதவீதம்) சிறப்பாக செயல்படுகின்றன.
தென்ஆப்பிரிக்கா (42.7 சதவீதம்), பெல்ஜியம் (38 சதவீதம்), நேபாளம் (32.7 சதவீதம்), ஆப்கானிஸ்தான் (27.3 சதவீதம்), சீனா (24.9 சதவீதம்), சிங்கப்பூர் (23 சதவீதம்), ஐக்கிய அரபு அமீரகம் (22.5 சதவீதம்), சவுதி அரேபியா (19.9 சதவீதம்), ரஷிய கூட்டமைப்பு (15.8 சதவீதம்), மலேசியா (14.4 சதவீதம்) ஆகிய நாடுகளும் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், ஜப்பான் (10.2 சதவீதம்), இலங்கை (5.3 சதவீதம்) ஆகியவை மோசமான நிலையில் உள்ளன. உலக அளவில் பெண் எம்.பி.க்களின் சராசரி 24.3 சதவீதம் ஆகும்.
1952ல் சுதந்திர இந்தியாவில் முதலாவது தேர்தல் நடந்தபோது, 24 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:
பிரதமர் மோடியின் ஆட்சியில் பா.ஜ.க. ஆரம்பம் முதலே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான தீர்மானத்தை பா.ஜ.க. அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியது. மக்களவையில் எதிர்க்கட்சிகள் போதிய ஆதரவு அளிக்காததால் இந்த தீர்மானத்தை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
சென்னையில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த உரையாடலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் இதை செய்யவில்லை. மக்களவையிலும் இதற்கான ஒத்துழைப்பு வழங்கவில்லை. பா.ஜ.க. கட்சியிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கட்சி அமைப்பு சட்டத்தில் உள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. செயற்குழுவில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணிப்பிரிவு பதவிகளிலும், மண்டல பதவிகளிலும் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 10 சதவீதம் பெண் எம்.பி.க்கள் உள்ளனர். இதில் அதிகமாக இருந்தது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் தான். இதைப்போல் இந்தியாவில் அதிக பெண் மேயர்கள் உள்ளதும் பா.ஜ.க.வில் தான். இதுவரை பெண்களுக்கு குடும்பநலத்துறை உள்ளிட்ட சுலபமான துறைகளில் தான் பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தான் பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை பெண்களுக்கு கொடுத்துள்ளோம். பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்க அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதுதான் உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு முதலில் கொண்டுவரப்பட்டது. இதனால் 33 சதவீதத்தையும் தாண்டி பெண்கள் சாதித்து காட்டினார்கள். அதன் பின்னர் தான் சட்டமாக்கினார்கள். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்பது முக்கியமானது. இதனால் தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதற்கு குரல் கொடுத்து வருகிறார்.
நானும் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த, அனைத்து கட்சி கூட்டங்களிலும் வலியுறுத்தியிருக்கிறேன். மத்தியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது மாநிலங்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றினார்கள். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மக்களவையில் கொண்டுவருவேன் என்று பா.ஜ.க. தெரிவித்தது. மக்களவையில் தனிப்பட்ட பெரும்பான்மை மற்றும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருந்தும் பா.ஜ.க. கொண்டுவரவில்லை. மசோதா நிறைவேற்றுவதற்கான பட்டியலில் கூட இடம் பெறச் செய்யவில்லை. கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும்போது பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிச்சயமாக கொண்டு வருவோம். வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 8 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே இருக்கின்றனர். பெண்களின் கருத்துகள் இல்லாமல் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அல்லது அதையும் தாண்டி இடஒதுக்கீடு இருக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.