தேசிய செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதா: இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

மசோதாக்கள் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

டெல்லி,

நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகள் 850 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் என மொத்தம் 850 தொகுதிகளாக மறுவரையறை மூலம் அதிகரிக்கப்பட உள்ளது.

தொகுதிகளை மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தியப்பின் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக தொகுதி மறுவரையறை மசோதா - 2026, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.

இதனிடையே, இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா போர்வையில் பாஜக அரசு தொகுதி மறுவரையறையை அமல்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்றும் அது நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ வலிமையை குறைக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களையும் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் மீது நேற்று முதல் மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மணி மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு இன்று இரவு 7 மணிக்கு மக்களவையில் நடைபெற உள்ளது.