புதுடெல்லி
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும். இதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த அனைத்து கட்சிகளின் அவை தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், விரிவான விவாதங்களுக்கு பின்னர், நாடு முழுவதும் உண்மையான மனவுறுதியுடன் நாரி சக்தி வந்தன் அதினீயம் அமல்படுத்தப்பட வேண்டிய தருணம் வந்துள்ளது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்த வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
பெண்கள் மற்றும் வருங்கால புதிய தலைமுறையினருக்காக முன்னிட்டு பொறுப்புணர்வுடன் கட்சிகள் நடந்து கொண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன என கூறிய அவர், இந்திய அரசியலில் பெண்களுக்கான பெரியதொரு சாதனையாக அது இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு கட்சி அல்லது தனிநபர் என்றில்லாமல் அதற்கும் மேலான ஒரு தருணம் இது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை இரு அவைகளிலும் வெளிப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் நீண்ட காலத்திற்கு விருப்பம் தெரிவித்து வந்தபோதிலும், அந்த நோக்கம் உண்மையாவதற்கான சரியான நேரம் வந்துள்ளது. தேசத்தின் பெண் சக்தி மற்றும் 140 கோடி இந்தியர்களுக்கான பெரிய சாதனையாக இது இருக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த வரலாற்று சாதனையை படைப்போம் என்று எனக்கு முழு அளவில் நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
பெண்கள் முன்னேறுவதற்கான, முடிவெடுப்பதற்கான மற்றும் தலைமை வகிப்பதற்கான சந்தர்ப்பம் அமையும்போது மட்டுமே, எந்தவொரு சமூகமும் முன்னேறும். ஒரு வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவின் கனவு நனவாக, இந்த பயணத்தில் பெண்கள் சிறந்த மற்றும் துடிப்பானதொரு பங்கு வகிப்பது அவசியம் என்றும் கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.
சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற இரு அவைகளை சேர்ந்த அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி சார்பில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைவரும் கட்டாயம் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒருவருக்கும் விடுமுறை அளிக்கப்படாது என்றும் உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனினும், காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான கார்கே, அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.