தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா; அமித்ஷா நாளை தாக்கல் செய்கிறார்

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கி 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய சட்ட துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர், 2023 நாரி சக்தி வந்தன் அதினியம் சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த கூட்டத்தொடரில், பிரதமர் மோடி கலந்து கொண்டு, நாளை மதியம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, மக்களவையில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இவற்றில், 815 இடங்கள் மாநிலங்களுக்கும், மீதமுள்ள 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் கிடைக்கும். மக்களவையில் தற்போது 543 எம்.பி.க்களுக்கான இடங்கள் உள்ளன.

எனினும், இந்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் இல்லத்தில், அனைத்து கட்சியினர் பங்கேற்ற கூட்டம் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஷ்டீரிய ஜனதா தள செயல் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே மற்றும் இந்தியா கூட்டணியின் பிற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது என குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து அவர், நாங்கள் அனைவரும் மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

நாங்கள் அதற்கு தொடர்ந்து ஆதரவளித்தபோதும், அதன் ஆரம்பகட்ட சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், தொகுதி மறுவரையறையை வைத்து அவர்கள் சில தந்திர விளையாட்டுகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம். ஆனால், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக இருக்க மாட்டோம் என்றார்.