புதுடெல்லி
இந்தியாவில் உள்ள ஈரானின் உச்ச தலைவருக்கான பிரதிநிதி மஜித் ஹகீம் இலாஹி, மேற்காசிய போர் பதற்றம் பற்றி குறிப்பிட்டு பேசினார். அவர் அளித்த பேட்டியின்போது, போரை நாங்கள் விரும்பவில்லை. இந்த பகுதியில் போரை தவிர்க்க, பல முறை நாங்கள் முயன்றோம். இந்த பகுதியிலுள்ள அண்டை நாடுகளிடம் கூட நாங்கள் கூறினோம். இதற்கு மேல் போரிடும் அளவுக்கு இந்த பகுதி உகந்தது அல்ல என கூறினோம்.
உண்மையில் இது ஈரானுக்கான நெருக்கடி மட்டுமல்ல. உலகளாவிய நெருக்கடி இது. அவர்கள் எங்கள் மீது போரை திணித்துள்ளனர். நாங்கள் எங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். எங்களுடைய கண்ணியம், சுதந்திரம், நாட்டுக்காக உயிரை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவர் கூறினார்.
கியாஸ் தட்டுப்பாடு, பெட்ரோல் பற்றாக்குறை, கச்சா எண்ணெய் இல்லை போன்ற விசயங்கள் காணப்படுகின்றன. பொதுமக்கள் பாதிக்கப்படுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், எங்களை நாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும். எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை என்றார். போரை நிறுத்தும்படி உலக தலைவர்கள் அமெரிக்காவிடம் கூற வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஏனெனில், அவர்கள்தான் போரை தொடங்கினர். அவர்களிடம் நாங்கள் அனுபவப்பட்டு இருக்கிறோம். போரின் இறுதி வரை போராட ஈரான் தயாராக உள்ளது என்பது எனக்கு தெரியும். அது 5 ஆண்டுகள் ஆனால் கூட என்றும் அவர் கூறியுள்ளார்.