தேசிய செய்திகள்

உலகில் அதிக உயரம் கொண்ட ராவணன் உருவ பொம்மை இன்று எரிப்பு; தசரா திருவிழாவில் பிரமாண்டம்...

இதற்கு 7 டன் இரும்பு தேவைப்பட்டு உள்ளது. ஊழியர்களுக்கான சம்பளம், பொருட்கள் என மொத்தம் ரூ.40 லட்சம் செலவாகி உள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் தசரா திருவிழாவில், உலகில் அதிக உயரம் கொண்ட ராவணன் உருவ பொம்மை இன்று எரிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழா என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வில் வடக்கே பெரிய உருவம் கொண்ட ராவணன் உருவபொம்மை எரிக்கப்படும்.

இதேபோன்று, டெல்லி பீதாம்புராவில் இன்று ராம்லீலா விழா நடைபெறும். தீமையை நன்மை வெற்றி கொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் எரிக்கப்படும்.

ரூ.40 லட்சம்

இதனை முன்னிட்டு, டெல்லியில் துவாரகா நகரில் 221 அடி உயர ராவணன் உருவ பொம்மை இன்று எரிக்கப்பட உள்ளது. இது 22 அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடத்தை விட அதிக உயரம் கொண்டது. 3 மாதங்களாக 120 கலைஞர்கள், ஊழியர்கள் இணைந்து பணியாற்றி பொம்மையை உருவாக்கி உள்ளனர்.

இதற்கு 7 டன் இரும்பு தேவைப்பட்டு உள்ளது. ஊழியர்களுக்கான சம்பளம், பொருட்கள் என மொத்தம் ரூ.40 லட்சம் செலவாகி உள்ளது.

பசுமை பட்டாசுகள்

பொதுவாக மனிதர்கள் உதவியுடன் இந்த பொம்மை தீப்பற்ற வைத்து எரிக்கப்படும். ஆனால், தற்போது ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட உள்ளது. அந்த பொம்மைகளுடன் 90 அடி உயரம் கொண்ட மேகநாத் மற்றும் கும்பகர்ணன் பொம்மைகள் எரிக்கப்பட உள்ளன. அப்போது பசுமை பட்டாசுகளும் வெடிக்கப்படும்.

தொலைவில் இருந்தோ அல்லது மிக நெருக்கத்தில் இருந்தோ பார்க்கும்போது, இந்நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனால், டெல்லி தசரா திருவிழா இந்த ஆண்டு களை கட்டியுள்ளது.

SCROLL FOR NEXT