திருவனந்தபுரம்
கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த பகுதிகளில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று, கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், கோழிக்கோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கடலோரத்தில் உள்ள மக்கள், கால்நடைகள் மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்கும்படியும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.