லக்னோ
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். 3 நாட்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களான, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், வெளிவிவகார துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோரை யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து பேசினார்.
இதில் பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, நீடித்த வளர்ச்சி, இணைப்பு மற்றும் நவீன உற்பத்தி உள்ளிட்ட விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இரு நாடுகளுக்கான விரிவான மூலோபாய நட்புறவுக்கான செயல் திட்டம் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, உத்தர பிரதேசத்திற்கு வர கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பற்றியும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதில், உத்தர பிரதேசத்தில் முதலீடு மேம்படும் வகையில், சிங்கப்பூரில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டுக்கான முன்மொழிவுகளை பெற்றிருக்கிறோம் என யோகி ஆதித்யநாத் கூறினார். இதில், ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிய மாநிலத்தின் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூர் பயணம் முடிந்ததும் ஜப்பானுக்கு நேற்று சென்றார். இதில், அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
அவருடைய ஜப்பான் பயணம் பற்றி சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, சிலர் ஜப்பானுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். ஜப்பானை நிப்பான் என்றும் கூட அழைப்பார்கள்.
நம் நாட்டுக்கு, பெயர் மாற்றும் முதல் மந்திரி ஒருவர் வந்திருக்கிறார் என்பதற்காக ஜப்பான் மக்கள் அச்சப்பட மாட்டார்கள் என நான் நம்புகிறேன் என்றார். தொடர்ந்து அகிலேஷ் கூறும்போது, ஜப்பானை அவர் ஆதித்யாபூர் அல்லது ஆதித்யாபுரம் என பெயர் மாற்றுவார் என்று கிண்டலாக கூறினார். அப்படி பெயர் மாற்றம் செய்து விட்டு, திரும்பி இந்தியாவுக்கு வரமாட்டார் என நம்புகிறேன் என்றும் கூறினார். உத்தர பிரதேசத்தில் பல்வேறு நகரங்களின் பெயர்கள் யோகி அரசில் மாற்றப்பட்டு வருகின்றன. அதனை குறிப்பிடும் வகையில் அகிலேஷ் கிண்டலாக கூறியுள்ளார் என கூறப்படுகிறது.