சென்னை,
டிஜிட்டல் முறையில் தற்போது வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்துவிட்டது. பணம் அனுப்புவதற்கும் டெபாசிட் செய்வதற்கும் வங்கிகளுக்கு சென்று கால்கடுக்க நின்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது எனச் சொல்லும் அளவிற்கு தற்போது நிலைமை மாறிவிட்டது. வங்கி பக்கமே போகாமல் பணப் பரிவர்த்தனையை செல்போன் மூலமே செய்து முடித்துவிடலாம். ஆன்லைன் ஷாப்பிங் முதல் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்புவது வரை சில நொடிகளில் அனுப்பும் வசதி வந்துவிட்டது. அதிலும் யுபிஐ வந்த பிறகு பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்திலும் எளிதாக பேமென்ட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற தனியார் நிறுவனங்கள் யுபிஐயுடன் கைகோர்த்து இந்த சேவையை வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்கள் பணம் அனுப்புவதை எளிதாக்கும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியாகின்றன. அந்த வகையில் தற்போது, பின் நம்பர் இல்லாமலே பணம் அனுப்பும் வசதியை போன்பே கொண்டு வந்துள்ளது.
அதாவது, பின் நம்பர் பதிவு செய்யாமல் பயோமெட்ரிக் முறையில் பணம் அனுப்ப முடியும். பயோமெட்ரிக் அல்லது முக அடையாள அங்கீகாரம் வாயிலாக பணம் அனுப்பும் வசதி போன்பே-வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 வரை உள்ள தொகையை இந்த வசதியை பயன்படுத்தி அனுப்ப முடியும். ரூ.5,000-க்கு மேற்பட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்றால் யுபிஐ பின் எண்ணை பதிவு செய்து மட்டுமே செலுத்த முடியும் என்றும் போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதாகவும் விரைவாகவும் பணம் அனுப்புவதை உறுதி செய்ய இந்த புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளதாக போன்பே தெரிவித்துள்ளது.