அதுல் 
தேசிய செய்திகள்

கடித்த பாம்பை பையில் போட்டு மருத்துவமனைக்கு சென்ற இளைஞரால் பரபரப்பு

என்னை கடித்தது எந்த வகையான பாம்பு என்று தெரிந்தால்தான், அதற்கு தகுந்தாற்போல் டாக்டர்கள் விஷமுறிவு மருந்து கொடுத்து சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்று அதுல் தெரிவித்தார்.

லக்னோ ,

உத்தரபிரதேசத்தில் பாம்பு கடியுடன் அரசு மருத்துவமனைக்கு வந்த இளைஞர், தன்னை கடித்த பாம்பையும் பையில் பிடித்துக் கொண்டு வந்த சம்பவம் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதுல்

உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் அதுல் (வயது 36). இவர் தனது வீட்டில் உள்ள மோட்டாரை இயக்குவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டாருக்கு கீழே இருந்த பாம்பு ஒன்று, அவரது கையை கடித்தது. இதில் சிறிது நேரத்திலேயே அதுலின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது.

பாம்புடன் வந்த வாலிபர்

உடனே பதறியடித்த உறவினர்கள் அதுலை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த அதுல், தன்னிடம் இருந்த பையை காட்டி, "என்னை கடித்த பாம்பு இதற்குள்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அலறியடித்து மிரண்டு போயினர்.

விஷமுறிவு மருந்து

இதையடுத்து, அந்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததற்கான காரணத்தை அதுல் டாக்டர்களிடம் விளக்கினார். "என்னை கடித்தது எந்த வகையான பாம்பு என்று தெரிந்தால்தான், அதற்கு தகுந்தாற்போல் டாக்டர்கள் விஷமுறிவு மருந்து கொடுத்து சரியான சிகிச்சை அளிக்க முடியும். அதனால்தான் கடித்த பாம்பை உயிரோடு பிடித்து பையில் போட்டுக்கொண்டு வந்தேன்" என்று அவர் கூறினார்.

வாலிபரின் இந்த சாதுரியமான செயலால் மருத்துவமனை வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

3 பேருக்கு பாம்பு கடி

இதற்கிடையே, இந்த சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பரேலி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் மேலும் 3 பேரை பாம்புகள் கடித்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT