தேசிய செய்திகள்

முன்விரோதத்தால் வாலிபர் சுட்டுக்கொலை: பதற்றத்தில் கிராம மக்கள்

பழைய பகை காரணமாக வாலிபர் ஒருவர் மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முசாபர்நகர்,

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாத்ரா பங்கர் கிராமத்தில் அக்‌ஷய் குமார் 26) என்ற வாலிபர் வாழ்ந்து வந்தார். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் கணவர் பலமுறை எச்சரித்தும் இருவருக்குமான உறவு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.

இந்த சூழலில் நேற்று, அக்‌ஷய் குமார் தனது வழக்கமான விவசாய பணிகளுக்காக வயலுக்கு சென்றிருந்தார். தனது வேலையை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவரை முன்று நபர்கள் கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற போது அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்‌ஷய் குமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மனோஜ் குமார், யுவக் மற்றும் பாரத் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பழைய பகை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது.