புதுடெல்லி,
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஐனஸ் பாரியா. இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தனது பயண அனுபவங்களை சமூக வலைதளங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தியா வந்த ஐனஸ் பாரியா, பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் ஐனஸ் பாரியா தனது தோழியுடன் ரெயிலில் பயணம் செய்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-
“பயணங்கள் எப்போதும் சவுகரியமாக இருப்பதில்லை. நாங்கள் ஒரு இந்திய ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அது எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால் வழக்கமாக அதில் நாங்கள் பயணம் செய்வோம்.
ஆனால் இந்த முறை எங்கள் இருக்கைக்கு எதிரில் சில வாலிபர்கள் அமர்ந்து கொண்டு நீண்ட நேரமாக எங்களை பார்த்துக் கொண்டே இருந்தனர். இதனால் நாங்கள் அசவுகரியமாக உணர்ந்தோம்.
இதற்கிடையில் எனக்கு கழிவறை உபயோக்கிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த வாலிபர்களை கடந்து செல்ல வேண்டும் என்பதால், எங்கள் இருக்கைக்கு அருகில் இருந்த கழிவறைக்கு பதிலாக, அடுத்த பெட்டியில் உள்ள கழிவறைக்கு சென்றேன்.
ஆனால் அந்த வாலிபர்கள் கழிவறை வரை என்னை பின்தொடர்ந்து வந்தனர். மேலும், அவர்கள் கழிவறை கதவை திறக்கவும் முயன்றனர். நல்வாய்ப்பாக அப்போது எனது தோழி அங்கு வந்து கதவருகே நின்று கொண்டார்.
பின்னர் இது குறித்து நாங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தோம். அவர் எங்களை 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் உள்ள இருக்கைக்கு மாற்றிவிட்டார். அங்கு நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம். எங்களுக்கு உதவி செய்த ரெயில்வே அதிகாரிக்கு நன்றி.
இந்தியாவில் எனது பயண அனுபவங்கள் பெரும்பாலும் அற்புதமாக இருந்திருக்கின்றன. ஆனால் இது போன்ற ஒரு சில சம்பவங்கள், நாம் பயணம் செய்யும்போது நமது உள்ளுணர்வை நம்ப வேண்டும் என்பதையும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதே போல், ஐனஸ் பாரியா வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், அவர் மும்பை வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 2 நபர்கள் அவரை நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்து, செல்பி புகைப்படம் எடுக்கக் கோரி தொந்தரவு செய்ததாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.