கொச்சி,
மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, இளைஞர்கள் நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுப்பார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டக் கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரகாஷ் ராஜ் கூறியதாவது:
ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுக்கக் கூடாது. பொதுமக்களே அதனை முன்னெடுக்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் தான் பங்கேற்றபோது, லட்சக்கணக்கான இளைஞர்கள் அங்கு திரண்டதை பார்த்தேன். செல்போன்களில் மூழ்கிக் கிடப்பதாக விமர்சிக்கப்படும் இன்றைய இளைஞர்கள், பகத்சிங், அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகங்கள் குறித்து விவாதிப்பதை பார்த்தேன். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதற்கான மொழியையும், உரிமைகளுக்காகப் போராடும் துணிச்சலையும் அறிந்தவர்கள். எனவே, மூத்த தலைமுறையினர் இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர்களை தலைமைப் பொறுப்புகளுக்கு முன்னிறுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் 13 கோடி முதல் 16 கோடி பேர் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினர், ஏழைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இளைய தலைமுறை மகாத்மா காந்தியின் வழியில், கோட்சேயின் வன்முறை வழியில் அல்லாமல், அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுக்கும். பகத்சிங்கின் மன உறுதியுடன் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பின் வலிமையைக் கொண்டு நமது உரிமைகளைப் பாதுகாப்போம் . இது எந்தவொரு அரசியல் கட்சியையும் வெற்றி பெறச் செய்வதற்கான போராட்டம் அல்ல; மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குடிமக்கள் இயக்கம் . இது அமைதியாக இருக்கும் காலம் அல்ல; போராட்டங்களுக்கான காலம்" என்று தெரிவித்தார்.