தேசிய செய்திகள்

சுதந்திரம் இல்லை... நண்பர்களை ஏவி காதலனை தீர்த்துக்கட்ட முயற்சி: இளம்பெண் உள்பட 5 பேர் கைது

5 பேர் கொண்ட கும்பல் காரிலேயே வைத்து காதலனையும், அவரது நண்பரையும் கடுமையாக தாக்கியது.

பாலக்காடு,

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள பெருமொடியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷபானா (வயது 19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால், காதலன் தன்னை சுதந்திரமாக இருக்க அனுமதிக்காமல் கட்டுப்பாடுகளை விதித்து தொல்லை தந்ததால் ஷபானா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதையடுத்து தனது தோழி நாதியாவை (20) சந்திக்கச் சென்ற ஷபானா, காதலனைத் தீர்த்துக்கட்டுமாறு அவரிடமும், அவரது நண்பர்களான ரபிபா (25), இர்ஷாத் (28), அசாருதீன் (25) ஆகியோரிடமும் உதவி கேட்டுள்ளார். இதற்கிடையே ஷபானாவை அழைத்துச் செல்லக் காரில் வந்த காதலனை, அந்த 5 பேர் கொண்ட கும்பல் காரிலேயே வைத்து காதலனையும், அவரது நண்பரையும் கடுமையாக தாக்கியது.

பின்னர் நள்ளிரவில் தாழே பாலம் சாலையில் அவரை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுத் தப்பியோடினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், படுகாயமடைந்த காதலனையும் அவரது நண்பரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காதலன் தன்னை சுதந்திரமாக இருக்க விடாமல், பல கட்டுப்பாடுகளை விதித்து தடையாக இருந்ததால் ஷபானா தனது நண்பர்கள் 4 பேரை ஏவி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஷபானா, நாதியா, ரபிபா, இர்ஷாத், அசாருதீன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT