எர்ணாகுளம்,
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியில் வசித்து வருபவர் ஷம்லா (வயது 29). இவருக்கு. பெரும்பாவூர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் வாலிபரை திருமணம் செய்வதாக ஷம்லா ஆசைவார்த்தை கூறினார்.
மேலும் தனது வர்த்தகத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி கடந்த 3.9.2024-ந் தேதி முதல் 20.11.2024-ந் தேதி வரை பல்வேறு தவணைகளாக ரூ.50 லட்சத்தை வாலிபரிடம் இருந்து பெற்று உள்ளார். இந்த பணத்தை வங்கி கணக்கு மற்றும் ஜிபே மூலம் வாலிபர் செலுத்தி இருக்கிறார். பணத்தை ஷம்லா பெற்ற பின்னர், வாலிபரை திருமணம் செய்து கொள்ளவோ அல்லது தனது வர்த்தகத்தில் பங்குதாரராக சேர்க்கவோ இல்லை என்று தெரிகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த வாலிபர் பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். ஆனால், பணத்தை திரும்ப தராமல் ஷம்லா காலம் கடத்தி வந்தார். இதுகுறித்து வாலிபர் பெரும் பாவூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அனில் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருமணம் செய்வதாக கூறி, ஷம்லா ரூ.50 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இதேபோல மலப்பு ரம், வயநாடு, கோதமங்கலம், ஆலுவா உள்ளிட்ட இடங்களில் ஷம்லா பலரிடம் பண மோசடி செய்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் வாலிபர்களிடம் நைசாக பேசி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்துள்ளார். கோதமங்கலத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 லட்சம், ஆலுவாவை சேர்ந்த ஒருவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தார். இதன் மூலம் அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.