தேசிய செய்திகள்

குடிபோதையில் துன்புறுத்திய கணவன்... திருமண நாளை கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

விக்னேஷ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜன்-கலா தம்பதியின் மகள் விக்னேஸ்வரி(வயது 27). இவருக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு கணவரின் வீட்டில் விக்னேஸ்வரி வாழ்ந்து வந்தார். 2 வருடமாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் விக்னேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வெளியே சென்ற அவருடைய மாமனார் சந்திரன் மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. உடனே அவர் வெளியில் இருந்து அழைத்தார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.

இதனை தொடர்ந்து விக்னேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சந்திரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீட்டுக்குள் பார்த்தார். அங்கு படுக்கை அறையில் விக்னேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிறகு விக்னேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த தற்கொலை தொடர்பாக கணவர் அபிலாஷ் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மனைவியுடன் திருமண நாளை கொண்டா டியதாகவும், தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் விக்னேஸ்வரியின் சகோதரர், கணவர் குடும்பத்தினரால் தனது சகோதரி துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். ஆனால் அவரது தற் கொலைக்கான காரணம் தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் அபிலாஷ் குடிபோதையில் தினமும் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து விக்னேஷ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக அபிலாஷை விழிஞ்சம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.