தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக இளம் பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி

யுனிவர் சிட்டியை இளம்பெண், தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட நபரிடம் இருந்து எந்த மெயிலும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்,

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 'கோச்சிங் சென்டர்' உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

12-ம் வகுப்பு படிக்க...

காரைக்கால் லத்தீப் நகர் கே.எஸ்.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹாஜா ஜெய்னுதீன். இவரது மகள் உம்மூர் ரிஸ்வானா (வயது 27). 10-ம் வகுப்பு வரை படித்த இவர், 'போஸ்' கல்வி முறை மூலமாக தனியார் கோச்சிங் பயிற்சி மையத்தில் பிளஸ்-2 படிக்க விரும்பினார். அதற்காக காமராஜர் சாலையில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில், அதன் உரிமையாளர் கார்த்திகேயன் (49) என்பவரை அணுகினார். அவரது சொந்த ஊர் புதுச்சேரி அரியாங்குப்பம் ஆகும்.

அப்போது படிப்பு செலவிற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.50 ஆயிரம் கட்ட வேண்டும் என கார்த்திகேயன் சொன்னதாக கூறப்படுகிறது. அதன்பேரில் உம்மூர் ரிஸ்வானா தனது தாயாருடன் சென்று, அவரது அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினார். ஆனால், அவர் படிப்புக்கான புத்தகத்தை கொடுக்கவில்லை. அது குறித்து கேட்ட போது, கூடிய விரைவில் புத்தகம் வந்து விடும் என்றும், வீட்டில் இருந்தபடியே படிக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.

கல்வி உதவித்தொகை

இந்தநிலையில் மீண்டும் கார்த்திகேயன் அவரது அலுவலகத்திற்கு உம்மூர் ரிஸ்வானாவை அழைத்து, 'நீ பிரெஞ்சு பாடம் படித்திருப்பதால் ஆசியன் கவுன்சில் மூலம் ரூ.15 லட்சம் கல்வி உதவித்தொகை (ஸ்காலர் ஷிப்) வாங்கி தருகிறேன்' என ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். அதை உண்மை என நம்பினார். பின்னர், ஒரு யுனிவர்சிட்டி பெயரில் உம்மூர் ரிஸ்வானாவுக்கு மெயில் வந்தது. அதில் ரூ.15 லட்சம் தயாராக இருப்பதாகவும், அதற்கு பணம் அனுப்ப சொன்னதன் பேரில் ரூ.2 லட்சம் கார்த்திகேயனை சந்தித்து அவரது கோச்சிங் சென்டரில் கொடுத்துள்ளார்.

பின்னர் மேலும் ரூ.3 லட்சம் கட்ட வேண்டும் என மெயில் வந்துள்ளது. அதைப்பார்த்த உம்மூர் ரிஸ்வானா, தன்னால் பணம் கட்ட முடியாது என தெரிவித்துள்ளார். அதற்கு கார்த்திகேயன், பணம் கட்டவில்லை என்றால் ஏற்கனவே கட்டிய ரூ.2 லட்சம் திரும்ப கிடைக்காது என கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி ரூ.3 லட்சத்தை உம்மூர் ரிஸ்வானா கட்டினார்.

ரூ.6 லட்சம் மோசடி

மேலும் ரூ.50 ஆயிரம் நிர்பந்தமாக செலுத்த சொல்லி படிப்பும் கற்றுத்தரப்படவில்லையாம். மேலும் கல்வி உதவித்தொகையும் பெற்றுகொடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட யுனிவர் சிட்டியை உம்மூர் ரிஸ்வானா, தொடர்புகொண்டு கேட்டபோது, காத்திகேயனிடம் இருந்து எந்த மெயிலும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோச்சிங் மைய உரிமையாளர் கார்த்திகேயன் போலி மெயில் ஐ.டி. உருவாக்கி உம்மூர் ரிஸ்வானாவை நம்ப வைத்து ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்டதை அறித்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT