தேசிய செய்திகள்

காதலனை தாக்கி கத்தி முனையில் மிரட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது

கத்தி முனையில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொச்சி,

கொச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக 25 வயது இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் ஒருவரை காதலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இளம்பெண் காதலனுடன் கொச்சி அருகே உள்ள எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் இருவரும் ரெயில் நிலைய முன்பதிவு மையத்தின் பின்புறம் உள்ள, சில ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த தனியார் ஓட்டல் முன்பு நின்றனர்.

அந்த சமயத்தில் கனமழை பெய்தது. பின்னர் காதலர்கள் ஓட்டலுக்குள் சென்றனர். பயன்படுத்தப்படாத ஓட்டல் என்பதால், புதர் மண்டி கிடந்தது. அங்கு 3 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். காதலன் இளம்பெண்ணுடன் ஓட்டலுக்குள் சென்றதை பார்த்த அவர்கள், காதலர்களை பின்தொடர்ந்து சென்றனர். ஓட்டலில் இருந்த மாடி பகுதிக்குள் காதலர்கள் சென்றனர்.

அங்கு வைத்து அவர்களை 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை தடுத்த காதலனை கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டனர். இதையடுத்து மதுபோதையில் இருந்த 3 பேரும் இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதில் ஒருவரது கையை இளம்பெண் கடித்து விட்டு, அங்கிருந்து கிழிந்த ஆடைகளுடன் தப்பி ஓடினார். மாடியில் இருந்து ஏணி மூலம் கீழே இறங்கி சென்று, ஹெல்ப் லைன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் எர்ணாகுளம் மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து இளம்பெண்ணுக்கு போலீசார் புதிய ஆடைகள் கொடுத்தனர். அவரிடம் புகார் அளிக்குமாறு கூறினர். ஆனால், இளம்பெண் புகார் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த காதலனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரவுடியான டேனிஷ் (39 வயது), கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் (28 வயது), அரூரை சேர்ந்த சஞ்சய் (35 வயது) ஆகியோர் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் பைக்கில் தப்பி சென்றது தெரியவந்தது. அதன் பதிவு எண்ணை வைத்து தேடியபோது, கொச்சி நகர் அருகே டேனிஷ், ராகுல் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சஞ்சய்யை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கத்தி முனையில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.