தேசிய செய்திகள்

வாலிபர் வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை வாலிபர் கொலையில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

வெட்டி படுகொலை

புதுச்சேரி ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 27). அவரது மனைவி சுயம்பு. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தமிழ்செல்வன் தனியார் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தமிழ்செல்வன் வாணரப்பேட்டை கல்லறை வீதியில் உள்ள கோவிந்த செட்டியார் தோட்டம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம்

அப்பகுதியில் உள்ள அழகுநிலையம் நடத்துபவர்களிடம் தமிழ்செல்வனுக்கு தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவரை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தபோதிலும் கொலையாளிகளை கைது செய்தால்தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும்.

இதற்கிடையே தமிழ்செல்வனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT