நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் நேற்று முன்தினம் மாலை ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாலை 6 மணி அளவில், வங்கியின் வேலை நேரம் முடியும் தருவாயில், வாடிக்கையாளரை போல மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் ஆரஞ்சு நிற குர்தாவும், கருப்பு நிற பைஜாமாவும் அணிந்திருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக, அவர் நேராக கேஷ் கவுன்ட்டர் பகுதிக்கு சென்றார்.
திடீரென தனது முகத்தை துணியால் மறைத்து கொண்ட அந்த நபர், தன் பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து அங்கிருந்த வங்கி ஊழியர்களின் கண்ணில் வீசினார். இதனால் நிலைகுலைந்த ஊழியர்கள், கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.
இந்த பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட கொள்ளையன், கேஷ் கவுன்ட்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் ரொக்க பணத்தை மின்னல் வேகத்தில் அள்ளி கொண்டு தப்பியோடினார். ஊழியர்களும், வங்கி காவலாளியும் சுதாரித்து கொண்டு அவரைப் பிடிக்க பாய்ந்தனர். ஆனால், வங்கியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்த நபர் நொடி பொழுதில் அங்கிருந்து மறைந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக வங்கியின் உள்ளேயும், வெளியேயும் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் ஆரஞ்சு நிற குர்தாவும், கருப்பு நிற பைஜாமாவும் அணிந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த அடையாளங்களை வைத்து நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். தப்பியோடிய கொள்ளையனை போலீசார் நாலாபுறமும் துரத்தினர். இறுதியில், கொள்ளை நடந்த அடுத்த 30 நிமிடங்களிலேயே மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.4 லட்சம் முழுமையாக மீட்கப்பட்டது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அரை மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீஸ் படையினரை பொதுமக்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். கைதான நபரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.