தேசிய செய்திகள்

மேம்பாலத்தில் அத்துமீறி ஸ்கூட்டரில் ஸ்டன்ட் செய்த வாலிபர்கள்; அடுத்து நடந்த அதிரடி

ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விதிமீறல்களில் வாகனங்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

ஐதராபாத்

பொதுமக்கள் செல்ல கூடிய மேம்பாலத்தில் வாலிபர்கள் அத்துமீறி ஸ்கூட்டரில் ஸ்டன்ட் செய்துள்ளனர்.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் 3 பேர் ஸ்கூட்டரில் பயணம் செய்தபடி ஸ்டன்ட் (சாகசம்) செய்துள்ளனர். மேம்பாலம் ஒன்றில் அவர்கள் அதி விரைவாக பயணித்தும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய சாகசங்களையும் செய்தபடி சென்றுள்ளனர் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில், அவர்கள் இதுபோன்று பல்வேறு சாகசங்களை செய்து அவற்றை வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அது வைரலானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

3 பேர் கைது

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் முகமது மொகினுதீன் என்ற மொகின் (வயது 24), ரிஸ்வான் (வயது 21) மற்றும் தொகித் (வயது 19) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, தவறான பாதையில் பயணம் செய்தல், நம்பர் பிளேட்டை எடுத்து விட்டு வாகனம் ஓட்டுதல், விரைவாக செல்லுதல் மற்றும் சாகசங்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் இதுபோன்று ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தனர்.

விதிமீறல்

முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் அல்லது சிறுவர்களுக்கு, அவர்களுடைய பெற்றோர் வாகனங்களை ஓட்ட கொடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

அப்படி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விதிமீறல்களில் வாகனங்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

SCROLL FOR NEXT