தேசிய செய்திகள்

சொமாட்டோ டெலிவரி பாய் தாக்கியதாக வீடியோ வெளியிட்ட பெண் மீது வழக்குப்பதிவு!

சொமாட்டோ டெலிவரி பாய் தன்னை தாக்கியதாக வீடியோ வெளியிட்ட பெங்களூரு பெண் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி,

பெங்களூருவில், சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக ஹிடேஷா சந்திராணி என்ற பெண் இன்ஸ்டாகிராமில், வழியும் ரத்தத்துடன் கடந்த வாரம் வீடியோ பதிவிட்டது பரபரப்பை உருவாக்கியது,

ஆனால் அப்பெண் தன்னை செருப்பால் அடிக்கவந்தார், அதனை தடுக்க முயன்போதுதான் அவருக்கு காயம் ஏற்பட்டது என அந்த டெலிவரி இளைஞர் காமராஜ் விளக்கம் அளித்தார். இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள சொமாட்டோ இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள காமராஜை, சொமாட்டோ நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு காவல் நிலையத்தில் டெலிவரி இளைஞர் காமராஜ் அளித்த புகாரின் பேரில் ஹிடேஷா சந்திராணி மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.