பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் அருகே கொட்டிகே ஹாரா பகுதியை சேர்ந்தவர் சிரில் மோனிஸ் (வயது 77). இவர் தனது மனைவியுடன் அந்தப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த தம்பதியின் மகன் பெங்களூருவிலும், மகள் துபாயிலும் வேலை பார்த்து வருகிறார்கள். சிரில் மோனிசின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மனைவியை வெளியே எங்கும் விடாமல் கவனமுடன் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சிரில் மோனிஸ், வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிரில் மோனிஸ் உயிரிழந்தார். சிரில் மோனிஸ் இறந்தது பற்றி அவரது மனைவிக்கு தெரியவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர், தனது கணவர் தூங்குவதாக எண்ணினார்.
மேலும் பெங்களூருவில் இருந்து அவரது மகன், தினமும் தொலைபேசியில் அழைக்கும்போதும் 'அப்பா நலமாக இருக்கிறார்' என்று மட்டும் அவர் கூறி உள்ளார். சிரில் மோனிஸ் இறந்து 10 நாட்கள் ஆவதால் உடல் அழுகி புழுக்கள் வைத்ததாக தெரிகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசி உள்ளது. ஆனாலும் அவர் கணவரின் உடல் அருகே இருந்துள்ளார். இந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், சிரில் மோனிஸ் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சிரில் மோனிஸ் படுக்கையில் உடல் அழுகி புழுக்கள் வைத்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பெங்களூருவில் உள்ள மகனுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் சிரில் மோனிஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது சிரில் மோனிசின் மனைவி, அவர் தூங்கிக்கொண்டிருப்பதாக கூறி தனது கணவரின் உடலை எடுக்க விடாமல் பாசப்போராட்டம் நடத்தினார். மேலும் அவரது உடலையும் தொட விடாமல் தடுத்துள்ளார். அங்கிருந்தவர்களிடம் கணவரை பிரித்து விடாதீர்கள் என கெஞ்சி உள்ளார். கணவர் இறந்தது கூட தெரியாமல் அவர் பாசப்போராட்டம் நடத்தியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது.
இதையடுத்து சிரில் மோனிசின் மகன் அங்கு வந்தார். அவர் தாயை சமாதானம் செய்தார். அதன்பிறகு போலீசார் சிரில் மோனிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சிரில் மோனிஸ் உடல் இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்யப்பட்டது.