பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹொஸ்பேட்டில் உள்ள துங்கபத்ரா அணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 33 கிரெஸ்ட் கதவுகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், தெலுங்கானா முதல்-மந்திரி ஏ. ரேவந்த் ரெட்டி ஆகியோருடன் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைப்பது கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு தேசியத் திட்டமாக எடுத்துச் செயல்படுத்த வேண்டும்."'ஒரே நாடு, ஒரே மின் வலையமைப்பு', தொலைத்தொடர்பு மற்றும் சாலை உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் இந்தியாவை வலுப்படுத்தியுள்ளன. அதேபோல் கங்கை மற்றும் காவிரி நதிகள் இணைக்கப்பட்டால் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கென்-பெத்வா நதி இணைப்பு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதுபோன்ற திட்டங்கள் நாட்டின் நீர்வள மேலாண்மைக்கு உதவும் என்றும் கூறினார்.
மத்திய ஜல்சக்தி துறை மந்திரி சி.ஆர். பாட்டீல் தலைமையில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரிகள் சந்தித்து விவசாயிகளின் நலன் குறித்து ஆலோசித்தது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்."நாம் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே தேசத்தின் குடிமக்கள். தென் மாநிலங்களின் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.துங்கபத்ரா அணை மூன்று மாநில விவசாயிகளுக்கும் பாசன நீர் வழங்குவதோடு, பொதுமக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்வதால் மிக முக்கியமான அணையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.2024-ஆம் ஆண்டு துங்கபத்ரா அணையின் 19-வது கதவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, தற்காலிகமாக ஸ்டாப்-லாக் கதவு பொருத்தப்பட்டது. தற்போது 33 கிரெஸ்ட் கதவுகளும் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன. இந்தப் பணியில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகள் இணைந்து செயல்பட்டதாகவும், இதன் மூலம் அணையும் விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
1983-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மற்றும் நான்கு மாநில முதல்-மந்திரிகள் இணைந்து தமிழ்நாட்டுக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட முடிவு செய்திருந்ததாகவும் சந்திரபாபு நாயுடு நினைவுகூர்ந்தார்.மேலும், எல் நினோ பருவநிலை தாக்கம் காரணமாக துங்கபத்ரா மற்றும் அல்மட்டி அணைகளுக்கு மேல் பகுதியில் இருந்து போதிய நீர்வரத்து இல்லை என்றும், எனவே இந்த ஆண்டு நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.முதலில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்குள் நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதன் பின்னர் மாநிலங்களுக்கு இடையேயான நதி இணைப்பு திட்டங்களை முன்னெடுக்கலாம் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.