போபால்,
மத்தியபிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் நேற்று இரவு பிக்-அப் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
கடசராய் பகுதியில் உள்ள கிக்ரடலப் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து, வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு 6 பேரும் வாகனத்தில் இருந்து கிழே இறங்கினர்.
மேலும், பஞ்சர் ஆன டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேலையின்போது வாகனத்தில் வந்த அனைவரும் வாகனத்தின் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் வேகமாக வந்த லாரி சாலையோரம் நின்றுகொண்டிருந்த 6 பேர் மீதும் அந்த வாகனம் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.