புதுடெல்லி,
டெல்லியில் நாளை(11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற அவர், காவல்துறை வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். மரியதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று ஜனாதிபதியை விஜய் சந்தித்துள்ளார். தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேசனார். அப்போது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நடராஜர் சிலையை விஜய் பரிசாக வழங்கினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஏற்படுத்தி த.வெ.க. ஆட்சி அமைத்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த முறை முதல்-அமைச்சர் விஜய் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியை மட்டும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், இன்று 2-வது முறையாக டெல்லி சென்ற முதல்-அமைச்சர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.