பெங்களூரு,
தலை துண்டித்து சிறுமியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து குடகு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சூர்லப்பி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மீனா (வயது 16) என்பவருக்கும். ஹம்மியாலா கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்கிற ஓங்காரப்பா (34) என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மீனாவின் வீட்டுக்கு சென்று இரு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி எச்சரித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் சென்ற சில மணி நேரங்களிலேயே பிரகாஷ், மீனாவின் வீட்டுக்கு மீண்டும் வந்தார். திருமணம் நின்றதால் ஆத்திரம் அடைந்த அவர் மீனாவின் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் மீனாவின் தந்தையை காலால் எட்டி உதைத்ததுடன், அவரது தாயை மரம் வெட்ட பயன்படுத் தப்படும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மீனாவை வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்ற பிரகாஷ், அங்கு அவருடைய தலையை கொடூரமாக துண்டித்து கொலை செய்தார். இதுகுறித்து சோமவார்பேட்டை போலீசார் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை குடகு மாவட்ட 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சுரேந்திரா நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். அப்போது பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.