கொல்கத்தா,
பிரதமர் மோடி நாளை(செப்டம்பர் 17-ந்தேதி) தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு, பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை கொண்டாட பா.ஜ.க.வினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை ஒரே வார்த்தையில் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 'சேவை' என்று கூறுவேன். அவரது பதவி மாறியுள்ளது, பொறுப்புகள் மாறியுள்ளன, சவால்கள் அதிகரித்துள்ளன. ஆனால், அவரது வாழ்க்கையின் அடிப்படை உணர்வாக இருக்கும் சேவை மட்டும் மாறவே இல்லை.
நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, 12 இடங்களில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அரசின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்கள். இதை செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இருப்பினும் அரசின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள், பிரதமரின் பிறந்தநாளின்போது தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
மேலும் நாடு முழுவதும் நாளை கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன. பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக தனது சேவைப் பயணத்தை தொடங்கி, இன்று பிரதமராக பதவி வகித்து வருகிறார். சுமார் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வரும் பிரதமர் மோடியின் பயணம் இந்தியாவின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை வழங்கியதோடு, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.