தேசிய செய்திகள்

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக பொருளாதார ஆலோசனைக் குழுவினருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

அமெரிக்கா- ஈரான் போரால் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கப்பல் வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 8 ரூபாய் அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிற பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. இது நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ள நிலையில், நெருக்கடியை சமாளித்து மீண்டு வர மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பிரதமர் மோடி இன்று பொருளாதார கவுன்சிலில் உள்ள நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல், சர்வதேச சந்தைகளில் நிலவும் மாற்றங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.