தேசிய செய்திகள்

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்: சிபிஎம் கருத்து

நடைமுறையின்படி, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க உள்ளன.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியாக அவர்களது கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று மாலை தங்கள் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ பேபி கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக ஆகிய தோழமை கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்னும் சில மணி நேரங்களில் இந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் முட்டுக்கட்டையை தவிர்க்கவும், தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கவும் தேவையான முடிவை எடுக்க உள்ளோம். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த மூன்று கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன.

விரைவில் முடிவு எடுக்கப்படும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்கவில்லை. ஆனால் விஜய் தலைமையிலான தவெக சில இடங்கள் குறைவாக இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நடைமுறையின்படி, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் அதனை செய்யாதது மிகவும் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஜனநாயக நடைமுறையில் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கவும், மக்களின் மொத்த தீர்ப்பை மதிக்கவும் மூன்று கட்சிகளும் இணைந்து ஆலோசித்து வருகின்றன. இன்னும் சில மணி நேரங்களில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.