பெங்களூரு,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அறிக்கை தயார் செய்ய எந்த தடையும் இல்லை என்று அதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக, விரைவான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம். தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டிற்கு கர்நாடக மக்களன் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முடிவை முன்னெடுத்துச் செல்வோம். இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.