தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது - நிதின் நபின்

இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதும் ஒருபோதும் பலிக்காது என நிதின் நபின் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழலில் இருந்து இந்தியாவை மீட்டு, பயங்கரவாதம் மற்றும் நக்சலைட்டுகளை வேரோடு ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாட்டை சீர்குலைக்க முயற்சி

பிரதமர் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளாக நாட்டில் பயங்கரவாதம் மற்றும் நக்சலைட்டுகளை வேரோடு ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'நக்சல்' மனப்பான்மை கொண்ட சிலர் இன்னும் இருக்கின்றனர்.

ராகுல் காந்தியின் நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது. ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் இளைஞர் தலைமை என்று கூறிக்கொள்பவர்கள் பயன்படுத்தும் மொழியை இந்திய இளைஞர்கள் கவனித்து வருகின்றனர்.

ஜனநாயகத்தை மதிக்கும் இளைஞர்கள்

இந்திய இளைஞர்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் ஜனநாயகத்துடன் ஆழமான தொடர்பு கொண்டவர்கள். இந்திய அரசியலமைப்பின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, நீங்கள் பயன்படுத்தும் இத்தகைய உள் நோக்கங்களை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பையும் ஜனநாயகத்தையும் சவாலுக்கு உட்படுத்தும் வகையிலும், நாட்டின் உயரிய பதவிகளில் இருப்பவர்களை அவமதிக்கும் வகையிலும் பேசப்படுவதை 140 கோடி இந்திய மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

வெளிநாட்டு சக்திகள் குறித்து எச்சரிக்கை

அரசியல் ஆதாயத்திற்காக வெளிநாட்டு சக்திகளை நம்பியிருப்பதும், அவற்றுடன் கூட்டணி அமைத்து இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதும் ஒருபோதும் பலிக்காது. நாட்டிற்கு எதிரான தீய நோக்கங்களை நிறைவேற்ற இத்தகைய சக்திகளால் முடியாது என்பதை தெளிவாக எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT