கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல், காய்கறி, தென்னை, வாழை, திராட்சை, கொய்யா உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து விளைபொருட்களை வாங்கி செல்கின்றனர்.
கடந்த ஆண்டு பருவமழை பெய்ததால் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் கிணற்று பாசனத்தின் மூலமும், சொட்டுநீர் பாசனம் மூலமும் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர்.
இதற்காக விவசாயிகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதிகளில் இருந்து ரெட்லேடி, சிந்தா ஆகிய 2 ரகங்களை சேர்ந்த பப்பாளி மரக்கன்றுகளை வாங்கி வந்து, நடவு செய்கின்றனர். இதில் ரெட்லேடி ரக பப்பாளிக்கு வெளிமாநில மார்க்கெட்டுகளில் நல்ல கிராக்கி உள்ளதால் கம்பம் பகுதியில் இந்த ரகங்களை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்கின்றனர். இவை நடவு செய்த 6-வது மாதத்தில் விளைச்சல் அடைந்து விடுகிறது.
8-வது மாதத்தில் காய்களை அறுவடை செய்து விடலாம். ஒரு மரத்தில் இருந்து 40 கிலோ வரை பப்பாளி கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. நல்ல வருமானம் கிடைப்பதால், பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, பப்பாளி வியாபாரிகளிடம் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து, அதன் அடிப்படையில் சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணின் தரம் அறிந்து உரமிட்டு பப்பாளியை பயிர் செய்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சீதோஷ்ண நிலை பப்பாளி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. பப்பாளி பழம் உணவாகவும், ஜாம் தயாரிக்கவும், மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது என்றார்.