செய்திகள்

ஊராட்சி அலுவலக உதவியாளர் கொலை வழக்கு: 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

ஊராட்சி அலுவலக உதவியாளர் கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள வீரபாண்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் சம்பத் (வயது 45). இவர் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் (24), நந்தகுமார் (24), தினேஷ் (23) உள்பட 11 பேரை கைது செய்தார். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கார்த்திக், நந்தகுமார், தினேஷ் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் நடராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீசார் வழங்கினர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து இந்த கொலை வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.