செய்திகள்

பரமத்தி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் துணிகரம்

பரமத்தி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பரமத்திவேலூர்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் மனைவி ஜெயலட்சுமி (வயது 41). இவர் நேற்று காலை தை அமாவாசையையொட்டி கீழ்சாத்தம்பூர் கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக மொபட்டில் குட்லாம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி கூச்சலிட்டுள்ளார். பின்னர் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.