புதுடெல்லி,
தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) அதிக அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கடந்த மாதம் 17-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
என்.ஐ.ஏ. சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி இந்தியர்களுக்கும், இந்தியாவின் நலனுக்கும் எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுதவிர மனிதர்கள் கடத்தல், கள்ளநோட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை, ஆன்லைன் பயங்கரவாதம், வெடிபொருள் சட்டத்தின்படியான குற்றங்கள் ஆகியவை தொடர்பாகவும் வெளிநாடு சென்று விசாரணை நடத்தலாம். இதுபோன்ற வழக்குகளை டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டு விசாரணை நடத்தும். இந்த அதிகாரம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.