மதுரை,
இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஓபிஎஸ் உடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து கொண்டனர்.
திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் அவர் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சட்டசபைக்கு சென்று சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் ஓ.பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அம்மாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செலவம் திமுகவுக்கு சென்றது பலமா பலவீனமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.அவர் கூறியதாவது:-
’எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி வழிநடத்துகிறார். அதிமுக தொண்டர்கள் பழனிசாமியை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதில் சிலருக்கு உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்வேறு முகாம்களில் இணைந்து வருகின்றனர், அதுபற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை.
ஒவ்வொரு கட்சியிலும் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது புதியதல்ல. இது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலேயே நடந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிலர் மாற்று முகாம்களுக்கு செல்வதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
இதுபோன்ற சலசலப்புகள், திசைதிருப்பல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். அதனை கடந்து எடப்பாடி பழனிசாமி வெற்றிவாகை சூடுவார். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள இபிஎஸ் வெற்றிபெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார்.
எல்லா பதவிகளையும் இங்கு அனுபவித்துவிட்டார். ஒரு தொண்டன் முதல்-அமைச்சர் ஆகமுடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. அதிமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் , சேர்மன்,சட்டமன்ற உறுப்பினர்,வருவாய்துறை அமைச்சர்,பொதுபணித்துறை அமைச்சர் இருந்து மூன்று முறை முதல்-அமைச்சர் இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் இப்போ போய் அங்க சேர்ந்து இருக்கிறது திமுகவுக்கு பலவீனம் அதிமுகவுக்கு பலம்’என்று கூறினார்