சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 7 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (19.04.2026) திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு, ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில், மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறேன்.
ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மனதிலும் ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான நம்பிக்கையும் காண முடிகிறது.
சட்டம், ஒழுங்கைக் காக்கவும், அனைவருக்குமான ஆட்சி அமைந்திடவும், பொதுமக்கள் பெருந்திரளெனக் கூடி ஆதரவு அளித்திடுமாறு, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.