திருச்சி,
திருச்சி பஞ்சப்பூரில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவரை மத்திய மந்திரி பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று. த.வெ.க.வை கூட்டணியில் சேர்ப்பது பற்றி நாங்கள் (அ.தி.மு.க.) எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனக்கு தெரிந்து பா.ஜனதா தரப்பிலும் யாரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. அதனால் எங்கள் மீது விமர்சனம் செய்ய முடியாது. எங்களுடன் மு.க.ஸ்டாலினால் நேரடியாக மோத முடியாது என்பதால் தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் இடையே தான் போட்டி என்கிறார். அ.தி.மு.க.வின் அடுத்த தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.