சென்னை,
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் (ஏப்ரல்) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெறும் தேதி வரும் 15-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் 23-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும் என்பதால், தேர்தல் பணிக்கு துணை ராணுவப் படையினர் 5 மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக தேர்தல் பணிக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் இன்று மதியம் சென்னை பெரம்பூருக்கு துணை ராணுவப் படையினர் வந்தடைந்தனர்.
11 கம்பெனியாக வந்துள்ள துணை ராணுவப்படையில், ஒவ்வொரு கம்பெனியிலும் 100 பேர் உள்ளனர். மொத்தம் 1100 பேர் சென்னை வந்துள்ளனர். அவர்கள் தனித்தனியாக வாகனங்களில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு 6 கம்பெனியினர் அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவுக்கு 5 கம்பெனியினர் செல்ல உள்ளனர். தேர்தல் பணிக்கு மேலும் துணை ராணுவப் படையினர் விரைவில் வருவார்கள் என்று கூறப்படுகிறது.