சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்பு மனுதாக்கலை வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்குள், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த தேர்தலை பொறுத்தவரை, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் நாம் தமிழர் கட்சி இறங்கிவிட்டது. அதன்படி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கையையும் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது வேட்பு மனு தாக்கலையும் 234 வேட்பாளர்கள் ஒரே நாளில் வழங்க திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி, 'வேட்பாளர்கள் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டதுபோல, வேட்பு மனுதாக்கலையும் ஒரே நாளில் ஒருமித்து செய்ய வேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும், மாற்று வேட்பாளர்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வேட்பு மனுதாக்கல் தொடங்கும் முதல் நாளான 30-ந்தேதி (திங்கட்கிழமை) உறுதியாக தாக்கல் செய்திடவேண்டும்' என்றும் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்களுக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந் தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.