சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பிலும், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, சென்னை மயிலாப்பூரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதைத்தொடர்ந்து 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் நடைபெறும் கூட்டத்திலும், மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் நடைபெறும் கூட்டத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார்
சென்னை ஆர்.கே.நகரில் 28-ந்தேதி மாலை 4 மணிக்கும், அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவொற்றியூரிலும் நடைபெறும் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற் கொள்ள இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.