அரசியல் களம்

குற்ற வழக்கு விவரங்களை வேட்பாளர்கள் விளம்பரம் செய்ய வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் உத்தரவு

குற்ற வழக்கு விவரங்களை விளம்பரம் செய்ய இந்திய தேர்தல் கமிஷன் படிவங்களை வரையறுத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையமானது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் (நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை பெறப்பட்டவை) உள்ள வேட்பாளர்கள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் உரிய படி வங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இதற்காக இந்திய தேர்தல் கமிஷன் படிவங்களை வரையறுத்துள்ளது. அதன்படி, குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைத்தளங்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பாக, இவற்றில் எது முதன்மையானதோ அதன்படி வெளியிடப்படவேண்டும்.

மேற்படி விளம்பரங்கள் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும். மேற்காணும் பொருள் தொடர்பான இந்திய தேர்தல் கமிஷனின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.