சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2016 சட்டசபை தேர்தலில் கடலூர், 2021 சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த முறை, தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் சீமான் களம் காண இருக்கிறார். காரைக்குடியில் அவர் கரை சேருவாரா? என்பதை பார்ப்போம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடி
காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக தற்போது இருப்பவர் மாங்குடி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், தொகுதி மக்களிடம் நன்கு பரிட்சயமானவர். இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, அதிமுக 4 முறை, திமுக 3 முறை, பாஜக - தமாகா தலா ஒரு முறை என வெற்றி பெற்றுள்ளன.
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை சுமார் 21,500 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தோற்கடித்தார். அதே நேரத்தில், அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி சுமார் 45 ஆயிரம் வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் 28 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.
அமமுகவுக்கு சிக்கல் இருக்காது
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கே காரைக்குடி தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. அதிமுக கூட்டணியிலும் இந்த தொகுதியை அமமுக கேட்டுவருகிறதாம். கடந்த முறை களம்கண்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இந்த முறை தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்துவிட்டதால், தொகுதியை பெறுவதில் அமமுகவுக்கு சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.
அவ்வாறு அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டால், தேர்போகி பாண்டியே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், பாண்டியே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அறிவித்துள்ளார்.
போட்டி பலமாக இருக்கும்
புதிய வரவான தவெக சார்பில் டாக்டர் பிரபு வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என தெரிகிறது. தேர்தல் களத்திற்கு தவெக புதிது என்றாலும், டாக்டர் பிரபு காரைக்குடிக்கு நன்கு பரிட்சயமானவர் என்று சொல்லப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானும் களம் இறங்கும் நிலையில், காரைக்குடியில் போட்டி பலமாக இருக்கும் என்றே தெரிகிறது. சமூக ரீதியாக பார்த்தால், காரைக்குடி தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், வல்லம்பர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இவர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறைந்த வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும்
காரைக்குடி தொகுதியில் காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை நகராட்சி மற்றும் 3 ஒன்றியங்கள் வருகின்றன. ஒன்றியங்களில் காங்கிரஸ், அமமுகவுக்கு செல்வாக்கு அதிகம் இருந்தாலும், மாநகராட்சி பகுதியில் சீமான், டாக்டர் பிரபுவின் கையே ஓங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோல், தேவகோட்டை நகராட்சி பகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், இந்த முறை காரைக்குடி தொகுதியில் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. குறைந்த வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.