சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. முதல் கட்டமாக 23 தொகுதிக ளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளது.
இந்தநிலையில், சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் த.வெ.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தவெகவில் சில தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் பட்டியல் இறுதியாகவில்லை.
இதனால் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை இன்றைக்கு பதிலாக நாளை மறுநாள் (29-ம் தேதி)க்கு தவெக ஒத்திவைத்துள்ளது. வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சிக்காக வந்த தவெகவினர் மீண்டும் சொந்த ஊர்களுக்கே புறப்பட்டு சென்றனர்.