அரசியல் களம்

திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை: தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு

கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. மறுப்பு தெரிவித்தது.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. முதலில் இரட்டை இலக்கத் தொகுதிகளை அந்தக்கட்சி கேட்டது. புதிய கட்சிகள் தி.மு.க.வில் இணைந்ததால் இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. மறுப்பு தெரிவித்தது.

மேலும் 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில், கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க. தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 16-ந் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க.விடம் கண்டிப்பாக 6 தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டுமென ஒருமனதாக நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

இதற்கிடையே, நேற்று மீண்டும் மாநிலக் குழு கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் கூடியது. இதில் தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க.வுடன் இன்று (புதன்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அப்போது, இந்திய கம்யூ னிஸ்டு கட்சிக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.